'ஆன்லைன்' வகுப்புக்கு தனி இ-மெயில்: கல்லூரி மாணவியருக்கு 'அட்வைஸ்'
திருப்பூர்:திருப்பூர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், 'இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான மொபைல் பயன்பாடு' குறித்த, 'வெப்பினார்' கருத்தரங்கு நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார். துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். பேராசிரியர்கள், அனைத்து துறை மாணவிகள், பிற மாவட்ட கல்லுாரி மாணவிகள் என, 150 பேர் பங்கேற்றனர்.
கொரோனாவால் அதிகரித்து வரும் இணைய பயன்பாட்டால், சைபர் குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பதை, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, டிஜிட்டல் மற்றும் சைபர் தடயவியல் அறிவியல்துறை தலைவர் தனராஜ் கலந்துரையாடினார்.அவர் பேசியதாவது:பெரும்பாலான கல்லுாரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. 'வெப்பினார்'ல் பங்கேற்க இமெயில் ஐ.டி., மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
இதன்மூலம் சைபர் திருட்டுகள் நடக்க அதிக வாய்ப்புண்டு.எனவே, மாணவியர் தனிப்பட இ-மெயில் ஐ.டி., கொடுப்பதற்கு பதில், இதற்கென பிரத்யேக ஐ.டி., யை உருவாக்கி பயன்படுத்துவது சிறந்தது. சமூக வலைதளங்கள், படங்களை பதிவிடுவது தவிர்க்க வேண்டும். மொபைல் போன்களில் தேவையற்ற, 'போட்டோ மற்றும் வீடியோ ' செயலிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.மொபைல் செயல்பாடு இயல்பை விட மெதுவாக இருப்பது, அதிகம் சூடாவது, செயலிகள் தானாக இயங்குவது போன்றவை அடிக்கடி நிகழ்ந்தால்,மொபைல்போன், 'ஹேக்' செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, மாணவியர் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.
Comments
Post a Comment